புலம்புவதை நிறுத்தி விட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள் - ரவி சாஸ்திரி
|கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஐ.பி.எல். வரலாற்றில் மிகப் பெரிய ஸ்கோரை சேசிங் செய்து பஞ்சாப் அணி வரலாறு படைத்தது.
புதுடெல்லி,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. மற்ற சீசன்களைக் காட்டிலும் நடப்பு சீசனில் அதிகளவு ரன் மழை பொழிந்து வருகிறது. இதுவரை 26 போட்டிகளில் 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர் எடுக்கப்பட்டு இருக்கிறது.
அதிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான போட்டியில் ஐ.பி.எல். வரலாற்றில் மிகப் பெரிய ஸ்கோரை சேசிங் செய்து பஞ்சாப் அணி வரலாறு படைத்தது. அந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 261 ரன்கள் குவித்த நிலையில், அந்த ஸ்கோரை சேசிங் செய்து வென்றது பஞ்சாப் கிங்ஸ்.
பேட்ஸ்மேன்கள் பார்வையில் பார்த்தால் இது மிகப்பெரிய சாதனைதான். ஆனால், பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை 2 அணிகளின் பந்துவீச்சாளர்களுமே அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். அந்த போட்டியில் கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் மட்டுமே சிக்கன பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.
அந்தப் போட்டியின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், " பந்து வீச்சாளர்களை யாராவது காப்பாற்றுங்கள் ப்ளீஸ்" எனக் குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதற்கு ஐ.பி.எல். தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி பதிலடி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் அஸ்வின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது பதிவின் கருத்துக்கு, பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ரவி சாஸ்திரியின் அந்த பதிவில், "இந்த ஐ.பி.எல். தொடரில் பந்துவீச்சாளர்கள் காலத்தை கடந்து வேலை செய்யும் பந்துவீச்சை கண்டு பிடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வேலை செய்யாத உங்களின் திறன்களை வைத்துக் கொண்டு விக்கெட் எடுக்க முயற்சி செய்யாமல் உங்கள் பலம் மற்றும் கவனத்தை பின்பற்றுங்கள். புலம்பல் மற்றும் சோகமாக பேசுவதை நிறுத்தி விட்டு உங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.