கனவு காண்பதை நிறுத்துங்கள் - பாகிஸ்தான் ரசிகரை கலாய்த்த ஹர்பஜன் சிங்
|இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
உலக கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த தொடராக நடைபெற்று வரும் ஐ.பி.எல்.-ல் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் மட்டும் விளையாட முடியாமல் தவித்து வருகிறார்கள். கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்ட போது சோயப் அக்தர், சல்மான் பட், சோகைல் தன்விர், கம்ரான் அக்மல் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினர். ஆனால் 2009ஆம் ஆண்டுக்கு பின் இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்கள் இணைந்து ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை பார்ப்பது இருநாட்டு ரசிகர்களின் கனவாக இருப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த ஒரு ரசிகர் எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். ஆனால் அதைப் பார்த்த ஹர்பஜன் சிங் இந்திய ரசிகர்கள் யாரும் அப்படியே கனவு காண்பதில்லை என்ற வகையில் அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "எந்த இந்தியருக்கும் இது போன்ற கனவு இல்லை. எனவே நீங்கள் முதலில் இப்படி கனவு காண்பதை நிறுத்தி விட்டு கண் விழியுங்கள்" என்று கலாய்த்து பதிலடி கொடுத்துள்ளார்.