ஸ்டீவ் சுமித் அதிரடி... சான் பிரான்சிஸ்கோ அணியை வீழ்த்தி வாஷிங்டன் ப்ரீடம் சாம்பியன்
|2-வது மேஜர் லீக் தொடரில் வாஷிங்டன் ப்ரீடம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
டல்லாஸ்,
2-வது மேஜர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான வாஷிங்டன் ப்ரீடம், கோரி ஆண்டர்சன் தலைமையிலான சான் பிரான்சிஸ்கோ அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ப்ரீடம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஆகியோர் களமிறங்கினர். முந்தைய ஆட்டங்களில் ஹீரோவான டிராவிஸ் ஹெட் நீண்ட நேரம் நிலைக்கவில்லை 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆண்ட்ரிஸ் கவுஸ் 21 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஸ்டீவ் சுமித் அதிரடியாக விளையாடினர். 4-வது விக்கெட்டுக்கு அவருடன் கை கோர்த்த மேக்ஸ்வெல்லும் அதிரடியில் பட்டையை கிளப்ப ஸ்கோர் மளமளவென எகிறியது. இதன் மூலம் வாஷிங்டன் ப்ரீடம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 88 ரன்களும், மேக்ஸ்வெல் 44 ரன்களும் குவித்தனர். சான் பிரான்சிஸ்கோ தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதனையடுத்து 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ அணி, வாஷிங்டன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 16 ஓவர்களில் 111 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வாஷிங்டன் ப்ரீடன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியில் அதிகபட்சமாக கார்மி லே ரூக்ஸ் 20 ரன்கள் அடித்தார். சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் ப்ரீடம் அணி தரப்பில் மார்கோ ஜான்சன் மற்றும், ரச்சின் ரவீந்திரா தலா 3 விக்கெட்டுகளும், ஆண்ட்ரூ டை 2 விக்கெட்டுகளும், நேத்ரவல்கர் மற்றும் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.
ஸ்டீவ் சுமித் ஆட்ட நாயகன் விருதையும், டிராவிஸ் ஹெட் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினர்.