"50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்கான தொடக்கம்" - நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் குறித்து தவான் கருத்து
|மீண்டும் ஒரு முறை இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்திருப்பது கவுரவம் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.
ஆக்லாந்து,
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி இந்திய கேப்டன் ஷிகர் தவான் நிருபர்களிடம் கூறுகையில், "மீண்டும் ஒரு முறை இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்திருப்பது கவுரவமாகும். இளம் வீரர்களுக்கு வித்தியாசமான சீதோஷ்ண நிலையில் தங்களது திறமையை சோதித்து பார்க்க இது நல்ல வாய்ப்பாகும்.
இந்த தொடர், 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராவதற்கான தொடக்கமாகும். தற்போது நான் ஒரு நாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறேன். இதனால் நிறைய நேரம் கிடைப்பதால் வேறு விஷயங்களிலும் கவனம் செலுத்த முடிகிறது. நான் மூன்று வடிவிலான போட்டிகளில் விளையாடும் போது இருந்ததை விட இப்போது இன்னும் வலுவாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக உணர்கிறேன்" என்றார்.