ஸ்டார்க் அபார பந்துவீச்சு... 10 ஓவர்களில் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்..!
|இந்திய அணி 10 ஓவர்களில் 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
விசாகப்பட்டினம்,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், கேப்டன் ரோகித்தும் களமிறங்கினர்.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே கில் ரன் ஏதும் எடுக்காமல் லபுஷேனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கேப்டன் ரோகித் சர்மாவும் 13 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்மித் வசம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவ், சந்தித்த முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அடுத்து வந்த கே.எல். ராகுல் நிலைத்து நின்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். முதல் நான்கு விக்கெட்டுகளையும் ஸ்டார்க், எடுத்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யாக் வந்த வேகத்தில் ஸ்மித்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்திய அணி 10 ஓவர்களில் 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கோலியும், ஜடேஜாவும் களத்தில் உள்ளனர்.