< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டார்க்...இந்தியாவுக்கு பும்ரா..ஆனால்..- மெக்ராத்
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டார்க்...இந்தியாவுக்கு பும்ரா..ஆனால்..- மெக்ராத்

தினத்தந்தி
|
5 Jun 2024 11:01 AM GMT

இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் பவுலராக ஜஸ்பிரித் பும்ரா இருப்பதாக மெக்ராத் கூறியுள்ளார்.

சிட்னி,

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. அதில் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இம்முறையும் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா, ஷிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இருப்பினும் இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் போன்ற டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பகுதி நேர பவுலர்களாக இல்லை என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே ஆகிய ஆல் ரவுண்டர்கள் ஐபிஎல் தொடரில் தடுமாற்றமாகவே செயல்பட்டனர். அதை விட வேகப்பந்து வீச்சுத் துறையில் பும்ரா தரமானவராக இருக்கிறார். ஆனால் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அவருக்கு சமமாக செயல்படும் அளவுக்கு இல்லை என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மிட்சேல் ஸ்டார்க்போல இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் பவுலராக ஜஸ்பிரித் பும்ரா இருப்பதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் மெக்ராத் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு நிகராக பந்து வீசி அழுத்தத்தை உண்டாக்கப்போவது யார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"ஐபிஎல் தொடரின் இறுதியில் ஸ்டார்க் எப்படி அசத்தினார் என்பதை பார்த்தோம். அதேபோல டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கு பும்ரா மிகவும் கடினமான ஒரு பவுலராக தெரிகிறார். எனவே ஆஸ்திரேலியா வெல்ல வேண்டுமெனில் ஸ்டார்க் நன்றாக பந்து வீச வேண்டும். ஆஸ்திரேலியா அவரை சார்ந்திருக்கிறது. அதேபோல இந்தியாவுக்கு பும்ரா. ஆனால் பும்ரா நன்றாக பந்து வீசும் போது அவரைச் சுற்றி சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுக்கப் போவது யார்?.

பும்ரா எந்தளவுக்கு தரமானவர் என்பதை ஐபிஎல் தொடரில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள்போல பவுலிங் துறையிலும் உங்களுக்கு இடது வலது கை ஜோடி தேவை. டி20 கிரிக்கெட்டில் உங்களுக்கு தயாராவதற்கு போதுமான நேரம் கிடைக்காது. நீங்கள் ஓரிரு ஓவர்கள் வீசி தயாராவதற்குள் போட்டியே முடிந்து விடும். எனவே உங்களுக்கு ஓப்பனிங்கில் நல்ல சேர்க்கையை கொண்ட பவுலர்கள் இருந்தால் உங்களால் போட்டியை வெல்ல முடியும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்