இலங்கை அபார பந்துவீச்சு... சமனில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி
|இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் அசலன்கா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
கொழும்பு,
இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் இலங்கை 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெல்லலகே 67 ரன்களும், நிசாங்கா 56 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - சுப்மன் கில் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் நிதானமாக விளையாட ரோகித் சர்மா அதிரடியில் வெளுத்து வாங்கினார். 33 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சுப்மன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே ரோகித் சர்மாவும் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களிலும், சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி - ஐயர் ஆகியோரில் கோலி 24 ரன்களிலும், ஐயர் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் இறுதி கட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். கேஎல் ராகுல் 31 ரன்களிலும், அக்சர் படேல் 33 ரன்களிலும் முக்கியமாக தருணத்தில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இறுதி கட்டத்தில் ஷிவம் துபே தனி ஆளாக போராடினார். இருப்பினும் ஆட்டம் சமனில் இருந்தபோது கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில் ஷிவம் துபே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அர்ஷ்தீப் சிங் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழக்க ஆட்டம் சமனில் முடிவடைந்தது. வெற்றியாளரை தீர்மானிக்க இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கவில்லை.
47.5 ஓவர்களில் இந்திய அணி 230 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 58 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்து வீசிய இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா மற்றும் அசலன்கா தலா 3 விக்கெட்டுகளும், துனித் வெல்லலகே 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.