< Back
கிரிக்கெட்
ஜெய்ஷாவின் அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது - இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க
கிரிக்கெட்

'ஜெய்ஷாவின் அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது' - இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க

தினத்தந்தி
|
14 Nov 2023 1:51 PM IST

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்குள் அரசின் தலையீடு இருப்பதாக கூறி, ஐசிசி-யில் இருந்து இலங்கை அணி தற்காலிகமாக நீக்கப்பட்டது.

கொழும்பு,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி 55 ரன்னில் ஆல்-அவுட் ஆகி மோசமாக தோற்றது அந்த நாட்டு அரசியல் மட்டத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். மேலும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார். அந்த குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றிருந்தனர்.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டு இந்த நடவடிக்கைக்கு தடை விதித்தது. இருப்பினும் இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சி ஆதரவுடன் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில் திடீர் திருப்பமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அதிரடியாக இடை நீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெய்ஷாவின் அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அர்ஜுன ரணதுங்க முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தனது பதவியை பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட்டை சிதைக்கிறார். அவரது அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது. மேலும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் ஜெய்ஷாவிற்கும் தொடர்பு உள்ளது' என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்