< Back
கிரிக்கெட்
குணதிலகா மீதான புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கமிட்டி - இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
கிரிக்கெட்

குணதிலகா மீதான புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கமிட்டி - இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

தினத்தந்தி
|
9 Nov 2022 7:47 AM IST

குணதிலகா மீதான புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட கமிட்டி அமைத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணியின் பல்வேறு வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க இருந்த இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ஆஸ்திரேலியா வந்த அவர், இலங்கை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடரின் இடையே குணதிலகாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டாரா சேர்க்கப்பட்டார்.

காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார். இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் அணியுடன் தொடர்ந்து பயணித்தும், வீரர்களுக்கு உதவியாகவும் இருந்தார். இந்த நிலையில் சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகா பாலியக் வன்கொடுமை வழக்கில் சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்க ஆஸ்திரேலிய உள்ளூர் கோர்ட்டு ஒன்று மறுப்பு தெரிவித்து விட்டது. இதுபற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விஷயத்தில் ஐ.சி.சி.யுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு ஒரு முழுமையான விசாரணை விரைவாக தொடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தது.

இதைத் தொடர்ந்து குணதிலகாவை இடைநீக்கம் செய்து இருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடந்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சிசிரா ரத்னாயகே, வக்கீல்கள் நிரோஷ்னா பெரேரா, அசெலா ரீகேவா ஆகியோர் அடங்கிய கமிட்டியை நேற்று நியமித்து இருக்கிறது.

இந்த கமிட்டி இலங்கை அணியின் மானேஜர் மற்றும் அதிகாரிகளிடம் குணதிலகாவின் நடத்தை குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் வாரிய செயற்குழு குணதிலகா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்