பிரபாத் ஜெயசூர்யா சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா : இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி..!!
|2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது.
காலே,
ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் லபுசேன், ஸ்மித் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் .லபுசேன் சிறப்பாக ஆடி சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. மெண்டிஸ் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் அரைசதம் கடந்த நிலையில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய சண்டிமால் சதம் அடித்து அசத்தினார்.
3-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 431 ரன்கள் எடுத்த இருந்தது. இன்று 4 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தினேஷ் சண்டிமால் இரட்டைசதம் அடித்து அசத்தினார். அவர் கடைசிவரை களத்தில் நின்ற நிலையில், மறுபுறம் விளையாடிய பேட்ஸ்மேன்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இதனால் இலங்கை அணி 554 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 190 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் 24 ரன்களிலும் கவாஜா 29 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஸ்மித் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, லபுசேன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்ட இறுதியில் அந்த அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இவர் முதல் இன்னிங்சிலும் 6 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
இதன் மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது.