'கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உதவிகரமாக இருந்தனர்' - குருணல் பாண்ட்யா
|தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை ரிங்கு சிங் மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் என குருணல் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுமுன்தினம் இரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து 2-வது முறையாக லக்னோ அடுத்த சுற்றுக்கு வந்துள்ள நிலையில் அந்த அணியின் பொறுப்பு கேப்டன் குருணல் பாண்ட்யா கூறுகையில், 'நாங்கள் விளையாடிய விதம் திருப்தி அளிக்கிறது. ஆட்டம் முழுவதும் கடும் நெருக்கடி இருந்தாலும், நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை.
ஒரு கட்டத்தில் அவர்கள் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்த போது, 2-3 ஓவர் துல்லியமாக பந்து வீசினால், ஆட்டம் நம்பக்கம் திரும்பி விடும் என்பது தெரியும். அதற்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உதவிகரமாக இருந்தனர். ரிங்கு சிங்குக்கு இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. அவர் களத்தில் இருந்தால் நாம் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார்' என்றார்.