'மைதானத்தை பொறுத்து சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்க்க வேண்டும்'- ஹர்பஜன் சிங்
|உலகக்கோப்பை தொடரில் இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஹர்பஜன் சிங் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. அஷ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என 3 சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.
இந்நிலையில் இந்திய அணி உலகக்கோப்பை தொடர் முழுவதும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஹர்பஜன் சிங் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், மைதானத்தைப் பொறுத்து அணித்தேர்வு இருக்க வேண்டும். சென்னை போன்ற மைதானத்தில் போட்டி நடந்தால் எந்த எதிர் அணியாக இருந்தாலும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உடன் விளையாடலாம். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மைதானம் ஒத்துழைத்தால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டும். இல்லையென்றால் முகமது ஷமியை அணியில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.