கிளாசென்- மில்லர் அதிரடி: இந்தியாவுக்கு 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா அணி
|நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது.
லக்னோ,
இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவன் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜென்னெமேன் மாலன், குவிண்டன் டி காக் நிதானமான தொடக்கத்தை ஏற்படுத்தினர். மாலன் 42 பந்துகளில் 22 ரன் எடுத்திருந்த நிலையில், ஷர்துல் தாக்கு பந்துவீச்சில் ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா 8 ரன்களிலும் ஐடன் மார்க்ரம் டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் மறுமுனையில், அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட குவிண்டன் டி காக் 54 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென்- டேவிட் மில்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் ரன்களை குவித்தனர். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இறுதிவரை இந்திய பந்துவீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.