இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா விலகல்
|பவுமாவுக்கு பதிலாக டீன் எல்கர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.
செஞ்சூரியன்,
செஞ்சூரியனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா, முதல் நாளில் பீல்டிங்கின் போது காயமடைந்தார். பந்தை பிடிக்க ஓடிய போது அவரது இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியோடு அவர் வெளியேறினார். அதன் பிறகு பேட்டிங் செய்ய வரவில்லை.
அவர் பேட்டிங் செய்ய தயாராக இருந்ததாகவும், அப்படி விளையாடினால் காயத்தன்மை அதிகமாகி விடும் என்பதால் 'ரிஸ்க்' எடுக்கவில்லை என்றும் தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் கூறினார். அந்த டெஸ்டில் எஞ்சிய நேரம் டீன் எல்கர் அணியை வழிநடத்தினார்.
இந்த நிலையில் கேப்டவுனில் வருகிற 3-ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து பவுமா விலகியுள்ளார். இதையடுத்து இந்த டெஸ்டிலும் டீன் எல்கர் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த டெஸ்டுடன் டீன் எல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது. பவுமாவுக்கு பதிலாக ஜூபைர் ஹம்சா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.