ஆன்ட்ரியாஸ் கவுஸ் போராட்டம் வீண்: அமெரிக்காவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணி
|அமெரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.
ஆன்டிகுவா,
டி20 உலகக்கோப்பை, கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இன்று 'சூப்பர் 8' சுற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, ஆரோன் ஜோன்ஸ் தலைமையிலான அமெரிக்கா அணியுடன் மோதியது.
அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ரீஸா ஹென்ரிக்ஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து குயின்டன் டி காக் , மார்க்ரம் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடி காட்டிய டி காக் அரை சதமடித்தார். அவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் மார்க்ரம் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் சிறப்பாக விளையாடி கிளாசன் 36 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 194 ரன்கள் எடுத்தது. அமெரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக நட்ராவால்கர் மற்றும் ஹர்மித் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணியின் சார்பில் ஸ்டீவன் டெய்லர் மற்றும் அன்ரீஸ் கோஸ் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான துவக்கம் தந்த இந்த ஜோடியில் டெய்லர் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் குமார் 8 ரன்களும், கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், கோரி ஆண்டர்சன் 12 ரன்களும், ஜஹாங்கிர் 3 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஸ் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஹர்மீத் சிங் , அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்த உதவினார். தொடர்ந்து ஆடிய அவர் 38 ரன்களில் வெளியேறினார்.
இறுதி வரை போராடிய ஆண்ட்ரீஸ் கோஸ் 80 (47) ரன்களும், ஜஸ்தீப் சிங் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் அமெரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.