< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்;  இந்தியா வெற்றி பெற அந்த நட்சத்திர வீரர் சிறப்பாக செயல்படுவது அவசியம் - ஜாக் காலிஸ்
கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்; இந்தியா வெற்றி பெற அந்த நட்சத்திர வீரர் சிறப்பாக செயல்படுவது அவசியம் - ஜாக் காலிஸ்

தினத்தந்தி
|
11 Dec 2023 10:51 AM IST

இளம் வீரர்களுக்கு இங்குள்ள சூழ்நிலைகள் எப்படி இருக்கும் அதில் எவ்வாறு விளையாட வேண்டும் என்ற அனுபவங்களை கோலியால் கொடுக்க முடியும்.

கேப்டவுண்,

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட கடைசியாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் 1992ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் கூறியது பின்வருமாறு;- "இந்த தொடர் எங்கே நடைபெற்றாலும் கோலி சாம்பியன் வீரர். ஏற்கனவே அவர் தென் ஆப்பிரிக்க மண்ணில் வெற்றிகரமாக செயல்பட்ட அனுபவத்தை கொண்டவர். அவரால் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் தம்முடைய அனுபவத்தை கொடுக்க முடியும். குறிப்பாக இளம் வீரர்களுக்கு இங்குள்ள சூழ்நிலைகள் எப்படி இருக்கும் அதில் எவ்வாறு விளையாட வேண்டும் என்ற அனுபவங்களை அவரால் கொடுக்க முடியும்.

இந்த தொடரில் அவர் பெரிய அளவில் அசத்துவதற்கு விரும்புவார் என்று நான் நினைக்கிறேன். தற்போது நல்ல பார்மில் இருக்கும் அவர் இந்தியா இங்கே வெற்றி பெறுவதற்கு பெரிய உதவியை செய்வார் என்று நினைக்கிறேன். ஒருவேளை இந்த தொடரை இந்தியா வென்றால் அது விராட் கோலி வெளிப்படுத்திய நல்ல செயல்பாடுகளின் காரணமாக இருக்கும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்