இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஒலிவியர் காயத்தால் விலகல்
|இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஒலிவியர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நாளை மறுதினம் (புதன்கிழமை) தொடங்குகிறது.
இந்த தொடருக்கான டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பிடித்திருந்த மிரட்டல் வேகப்பந்து வீச்சாளர் டுவென் ஒலிவியர் காயம் காரணமாக விலகியுள்ளார். இங்கிலாந்து லயன்சுக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடிய ஒலிவியர் வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தாயகம் திரும்புகிறார்.
30 வயதான ஒலிவியர் இதுவரை 15 டெஸ்டுகளில் விளையாடி 59 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் இல்லாதது தென்ஆப்பிரிக்காவுக்கு கொஞ்சம் பின்னடைவு தான். அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இங்கிடி, அன்ரிச் நோர்டியா, ககிசோ ரபடா, மார்கோ ஜேன்சன், லுதோ சிபம்லா, கிளென்டான் ஸ்டர்மான் ஆகிய 6 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். இதில் கணுக்கால் காயத்தால் அவதிப்படும் ரபடா தொடக்க டெஸ்டில் ஆடுவது சந்தேகம் தான்.