தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்; ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் அறிவிப்பு
|தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கேப்டவுண்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச போட்டிகளுக்கு ஒரே மாதிரியான ஊதியம் பெறுவார்கள் என்று அறிவித்து இருந்தது. அதன்படி தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியமும் பாலின பாகுபாட்டை தவிர்க்கும் விதமாக ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆண், பெண் இரு பாலருக்கும் சம ஊதியம் அறிவித்த நாடுகளான நியூசிலாந்து மற்றும் இந்தியாவுடன் தற்போது தென்னாப்பிரிக்காவும் இணைந்துள்ளது. ஐசிசி போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சமமான பரிசுத் தொகையை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க மகளிர் அணி கடந்த 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியை எட்டியது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியது. இதனால் தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போலெட்சி மொசெகி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான இந்த மாற்றங்கள் அடுத்த மாதம் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது. தென்னாப்பிரிக்க மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் மூன்று 50 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.