பரபரப்பான ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா
|இந்த தோல்வியின் மூலம் நேபாள அணி சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
செயின்ட் வின்சென்ட்,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் செயின்ட் வின்சென்ட் இன்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நேபாளம் அணிகள் ஆடின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரீசா ஹென்றிக்ஸ் 43 ரன்கள் அடித்தார். நேபாளம் தரப்பில் குஷால் புர்டெல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குஷால் புர்டெல் 13 ரன்னிலும், அடுத்து வந்த ரோஹித் பவுடல் 0 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து ஆசிப் ஷேக் உடன் அனில் சா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதில் அனில் சா 27 ரன்னிலும், அடுத்து வந்த திபேந்திர சிங் ஐரி 6 ரன்னிலும், குஷால் மல்லா 1 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆசிப் ஷேக் 42 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் நேபாள அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஒட்னீல் பார்ட்மேன் வீசினார். அதில் நேபாள அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் இந்த ஆட்டத்தை 1 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றது. நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 42 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் நேபாள அணி சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.