தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்...!
|தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டர்பன்,
ஐ.பி.எல். பாணியில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் அந்த நாட்டில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி முதல்முறையாக நடத்தப்படுகிறது. இந்த போட்டி தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந் தேதி வரை அங்குள்ள 6 நகரங்களில் நடக்கிறது.
'எஸ்.ஏ. 20' என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டியில் குயின்டான் டி காக் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், ரஷித் கான் தலைமையிலான எம்.ஐ. கேப்டவுன், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ், வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் எம்.ஐ.கேப்டவுன்-பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் 143 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய எம்.ஐ.கேப்டவுன் டெவால்ட் பிரேவிசின் அதிரடி ஆட்டத்தால் 15.3 ஓவரில் இலக்கை எட்டி பிடித்தது.
இதையடுத்து இன்று நடைபெறும் 2வது லீக் போட்டியில் குயின்டான் டி காக் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
குயின்டான் டி காக் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் கிளாசென், ஹோல்டர், சார்லஸ் உள்ளிட்ட முன்னனி வீரர்கள் உள்ளனர்.
அதேவேளையில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், ரோமாரியோ ஷெப்பர்ட், அல்சாரி ஜோசப் உள்ளிட்ட வீரர்கள் இருப்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது.