சில நேரங்களில் ஐ.பி.எல் என்பது கிரிக்கெட்டா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது - ரவிச்சந்திரன் அஸ்வின்
|ஐ.பி.எல் தொடரில் கிரிக்கெட்டுக்கு நிகராக விளம்பரங்களில் நடிப்பது, அதற்காக நீண்ட பயிற்சிகளை எடுப்பது போன்ற அம்சங்களும் பின்புலத்தில் நடக்கும்
ஜெய்ப்பூர்,
17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 9 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தாங்கள் ஆடிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன.
இந்நிலையில் சில நேரங்களில் ஐ.பி.எல் என்பது கிரிக்கெட்டா என்ற கேள்வி தமக்கு வரும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ஏனெனில் ஐ.பி.எல் தொடரில் கிரிக்கெட்டுக்கு நிகராக விளம்பரங்களில் நடிப்பது, அதற்காக நீண்ட பயிற்சிகளை எடுப்பது போன்ற அம்சங்களும் பின்புலத்தில் நடக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஒரு வீரராக ஐ.பி.எல் தொடருக்கு வந்த போது நான் நட்சத்திர வீரர்களிடமிருந்து தேவையான விஷயங்களை கற்றுக்கொள்ள பார்த்தேன். அதனால் 10 வருடங்கள் கழித்து ஐ.பி.எல் எப்படி இருக்கும் என்று நான் எப்போதும் நினைத்து பார்த்ததில்லை. கடந்த பல சீசன்களாக விளையாடி வரும் நான் ஐ.பி.எல் என்பது மிகப்பெரியது என்று சொல்வேன்.
சில நேரங்களில் ஐ.பி.எல் என்பது கிரிக்கெட்டா என்ற ஆச்சரியமும் எனக்கு ஏற்படும். ஏனெனில் அதன் பின்புலத்தில் நிறைய விஷயங்கள் நடைபெறும். நாங்கள் விளம்பரங்களில் நடிப்பதற்காக பயிற்சிகளை எடுப்போம். இந்தளவுக்கு ஐ.பி.எல் வளரும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
சி.எஸ்.கே அணியில் ஆரம்ப காலத்தில் விளையாடிய போது ஸ்காட் ஸ்டைரிஸிடம் பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஆரம்ப சீசன்களில் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடிய அவர் ஐ.பி.எல் 2 - 3 வருடங்களை தாண்டி நடக்காது என்று நினைத்ததாக என்னிடம் சொன்னார். இவ்வாறு அவர் கூறினார்.