< Back
கிரிக்கெட்
யாராவது காப்பாற்றுங்கள் ப்ளீஸ் - வைரலாகும் அஸ்வினின் எக்ஸ் பதிவு
கிரிக்கெட்

யாராவது காப்பாற்றுங்கள் ப்ளீஸ் - வைரலாகும் அஸ்வினின் எக்ஸ் பதிவு

தினத்தந்தி
|
27 April 2024 11:22 AM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வரலாற்று வெற்றி பெற்றது.

கொல்கத்தா,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சுனில் நரைன் மற்றும் பில் சால்ட்டின் அதிரடி அரைசதத்தின் மூலம் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது.

பின்னர் 262 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது கொல்கத்தா பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கி 18.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 262 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக பேர்ஸ்டோ 108 ரன்களையும், சஷாங்க் சிங் 68 ரன்களையும் குவித்து அசத்தினர்.

அதன் வாயிலாக ஐ.பி.எல். வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் சாதனையை பஞ்சாப் படைத்தது. அத்துடன் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தென் ஆப்பிரிக்காவின் சாதனையை உடைத்த பஞ்சாப் புதிய உலக சாதனை படைத்தது.

இந்நிலையில் 262 ரன்களை அசால்டாக சேசிங் செய்துள்ள பஞ்சாப் அணியை பார்த்து மிரண்டு போயுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலர்களை காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே இந்த வருடம் ஐதராபாத் அணி 287 ரன்கள் அடித்ததை போல பெரும்பாலான போட்டிகளில் அனைத்து அணிகளும் எளிதாக 200 - 250 ரன்கள் அடித்து வருகின்றன. எனவே இப்படியே போனால் பவுலர்கள் அழிந்து விடுவார்கள் என்ற வகையில் தெரிவிக்கும் அஸ்வின், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:-

"யாராவது பவுலர்களை காப்பாற்றுங்கள் ப்ளீஸ். 260+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியில் கடைசி 2 ஓவர்களில் பந்துகளுக்கு சமமான ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இது மூழ்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்