< Back
கிரிக்கெட்
சில நாட்களில் நாங்கள் சாம்பியன் அணி போல விளையாடுகிறோம்... ஆனால் சில நாட்களில் - தோல்வி குறித்து ஷாய் ஹோப் கருத்து

கோப்புப்படம் 

கிரிக்கெட்

சில நாட்களில் நாங்கள் சாம்பியன் அணி போல விளையாடுகிறோம்... ஆனால் சில நாட்களில் - தோல்வி குறித்து ஷாய் ஹோப் கருத்து

தினத்தந்தி
|
2 Aug 2023 12:30 PM IST

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்னில் சுருண்டு ஆல் அவுட் ஆனது.

டிரினிடாட்,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிவில் 1-1 என தொடர் சமநிலை வகித்தது.

இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 200 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இஷான் கிஷன், சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 351 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 2வது போட்டியில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை ஆல் அவுட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3வது போட்டியில் 351 ரன்களை விட்டுக்கொடுத்தது.

இந்நிலையில் இந்த தோல்விக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பேசியதாவது,

நான் எப்பொழுதுமே கூறுவது ஒன்று தான். போட்டியின் சூழலை கணித்து விளையாடுவது அவசியம். இந்த மைதானத்தில் இந்திய அணியை நாங்கள் போட்டியின் கடைசி நேரத்தில் கட்டுப்படுத்தினோம்.

ஆனால் போட்டியின் துவக்கத்தில் எங்களது பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. இருப்பினும் இந்த மைதானத்தில் 350 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான். ஆனால் இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை. அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இல்லாததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. எப்பொழுது நாங்கள் விளையாட சென்றாலும் எங்களால் வெற்றி பெற முடியும் என்றே நினைப்போம்.

அதேபோன்று எங்களது அணி வீரர்களிடம் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் தேவையான ஒன்று. சில நாட்களில் நாங்கள் சாம்பியன் அணி போல விளையாடி வெற்றி பெறுகிறோம். ஆனால் சில நாட்களில் முற்றிலும் தோற்று காலியாகி விடுகிறோம். இதுதான் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்