ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு - ராஜஸ்தான் அணி நிர்வாகத்தின் நெகிழ்ச்சி அறிவிப்பு
|ஐ.பி.எல். தொடரில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
ஜெய்ப்பூர்,
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
முன்னதாக இந்த போட்டியில் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பிங்க் நிற ஜெர்சியில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெண்களை கவுரவிக்கும் விதமாக இந்த முடிவினை எடுத்திருப்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜஸ்தான் பெண்களை சிறப்பிக்கும் விதமாக நாளைய போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற நெகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஏராளமான சலுகைகளை பெண்களுக்கு வழங்க உள்ளது.