எனது நண்பருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் - சச்சின்
|டி20 உலகக்கோப்பையை வென்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய கிரிக்கெட்டின் பயணம் முழுமை அடைந்துள்ளது என்று சச்சின் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது.
இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்தும், டிராவிட் குறித்தும் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் பேசுகையில்,'வெஸ்ட் இண்டீசில் 2007-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி மோசமாக தோற்று முதல் சுற்றுடன் வெளியேறியது. இப்போது 2024-ம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய கிரிக்கெட்டின் பயணம் முழுமை அடைந்துள்ளது. எனது நண்பர் ராகுல் டிராவிட்டுக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை அவர் தவற விட்டாலும், இப்போது இந்த டி20 உலகக் கோப்பையில் பயிற்சியாளராக அவரது பங்களிப்பு மகத்தானது' என்று கூறியுள்ளார்.