பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் இருந்து ஸ்மிருதி மந்தனா விலகல்...?
|இந்தியாவில் நடைபெற உள்ள டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்மிருதி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
புதுடெல்லி,
உலக அளவில் ப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட் தொடர்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் தேசிய அணிக்காக ஆடுவதை காட்டிலும் ப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாட சில வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்வரும் அக்டோபர் 19-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வரையில் இந்தியாவில் நடைபெற உள்ள டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்மிருதி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதனால் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரையில் நடைபெற உள்ள மகளிருக்கான பிக் பேஷ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதை குறிப்பிடும் வகையில் அவர் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கான வரைவுப் பட்டியலில் தனது பெயரை பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் இந்திய வீராங்கனைகள் சுமார் 18 பேர் இதில் கலந்து கொள்ளும் வகையில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளதாகவும், இதில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கும் இடம் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மகளிர் பிரீமியர் லீக், 'தி ஹன்ட்ரட்' போன்ற லீக் தொடர்களில் ஸ்மிருதி விளையாடி வருகிறார். இதில் அண்மையில் முடிந்த 'தி ஹன்ட்ரட்' சீசனில் 9 இன்னிங்ஸ் விளையாடி 238 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா அறியப்படுகிறார்.