தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சிவந்தி பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி
|தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் மும்பையில் சிவந்தி பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்தது.
மும்பை,
தமிழ்நாடு டாக்டா் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மும்பை கிளை சார்பில் முதலாம் ஆண்டு சிவந்தி பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி முல்லுண்டில் உள்ள ராஜே சம்பாஜி மைதானத்தில் நடந்தது. இதில் முல்லுண்டு ஸ்டார்ஸ், தானே வாரியர்ஸ், வெஸ்டன் டைகர்ஸ், பாண்டுப் டிராகன், சயான் சிக்சர்ஸ், நவிமும்பை சேலன்ஜர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.
5 ஓவர் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியை முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் கங்காதரே தொடங்கி வைத்தார். லீக் முடிவில் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதில் இருந்து முல்லுண்டு ஸ்டார்ஸ், சயான் சிக்சர்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.
முல்லுண்டு வெற்றி
இறுதிஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சயான் சிக்சர்ஸ் 5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய முல்லுண்டு ஸ்டார்ஸ் 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சிவந்தி பிரிமீயர் லீக் கோப்பையை கைப்பற்றியது.
பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ் சவுந்தர் முருகன், மதுரை தமிழ் இலக்கிய மன்ற நிறுவனர் அவனி மாடசாமி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.51 ஆயிரத்துடன் சுழற்கோப்பையும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அத்துடன் அணி வீரர்களுக்கு பா.சிவந்தி ஆதித்தனார் உருவம் பொறித்த வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை மன்ற மும்பை தலைவர் ரசல் நாடார், செயலாளர் ராஜ்குமார் நாடார், துணை தலைவர் வடிவேல் நாடார், பொருளாளர் ஜெபக்குமார் நாடார், இணைச்செயலாளர் மாரியப்பன் நாடார், நிர்வாக குழு உறுப்பினர்கள் பொன்னு நாடார், சிவன்பாண்டியன் நாடார், பி.டி.செட்டியார், பெனியேல் நாடார், மணிகண்டன் நாடார், சைமன் நாடார், செல்வன் நாடார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.