டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் சதம் விளாசிய 5-வது இந்திய வீரரானார் " கில் "
|சுப்மான் கில் இன்று தனது முதல் டி20 சதத்தை விளாசினார். இதன்மூலம் மூன்று பார்மெட்டிலும் சதம் அடித்த 5வது இந்திய வீரர் ஆனார்.
ஆமதாபாத்,
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. மேலும் டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வென்று அசத்தியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில், சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்கிற மூன்று பார்மெட் கிரிக்கெட் போட்டியிலும் சதம் விளாசிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த சாதனையை இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் படைத்துள்ளனர். இதோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 63 பந்துகளில் 126 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
இதுதான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிகபட்சமாக கோலி, 61 பந்துகளில் 122 ரன்களும், ரோகித் சர்மா, 43 பந்துகளில் 118 ரன்களும் எடுத்துள்ளனர்.
இதேபோல சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த ஏழாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோருடன் அவர் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
முன்னதாக இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பிறகு, இஷான் கிஷானுடன் கில் பேட்டிங்கைத் தொடங்கினார். இன்னிங்சின் ஆரம்பத்திலேயே கிஷான் ஆட்டமிழந்தார், ஆனால் கில் தனது முதல் டி20 அரைசதத்தை 35 பந்துகளில் எட்டினார். அடுத்த 76 ரன்களை வெறும் 28 பந்துகளில் எடுத்து மிரட்டினார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 200 ரன்களை இந்தியா கடக்க உதவிய சுப்மன் கில்லை சமூக வலைதளங்களில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.