முழு உடல்தகுதியுடன் தயாராக இருந்தால் ஸ்ரேயாஸ் அய்யர் 2-வது டெஸ்டில் விளையாடுவார் - டிராவிட் பேட்டி
|ஸ்ரேயாஸ் அய்யர் முழு உடல்தகுதியுடன் தயாராக இருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆடுவார் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அரைமணி நேரத்திற்கு முன்பாக பயிற்சி களத்திற்கு வந்த விராட்கோலி சுழற்பந்து வீச்சை திறம்பட கையாளும் வகையில் அதில் கூடுதல் கவனம் செலுத்தினார்.
பயிற்சியின் போது வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதுமே ஒரு வீரர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு வருவது நல்ல விஷயமாகும். காயத்தால் வீரரை இழப்பதை ஒரு போதும் விரும்பமாட்டோம். ஸ்ரேயாஸ் அய்யர் இன்று (நேற்று) கொஞ்சம் பயிற்சியில் ஈடுபட்டார். நாளையும் (அதாவது இன்று) அவர் எப்படி பயிற்சி மேற்கொள்வார் என்பதை பார்ப்போம்.
ஆனால் 5 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு அவர் உடல்தகுதியுடன் தயாராக இருந்தால் நிச்சயம் நேரடியாக ஆடும் லெவனில் சேர்க்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வேளை அவருக்கு பதிலாக இடம் பெற்ற வீரர் சதம் அடித்தால் கூட அவரை உட்கார வைத்து விட்டு, காயத்தில் இருந்து தேறி அணிக்கு திரும்பும் இது போன்ற முன்னணி வீரருக்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்போம்.
ஸ்ரேயாஸ் அய்யர் நன்றாக விளையாடி இருக்கிறார். குறிப்பாக வங்காளதேசத்தில் நடந்த டெஸ்டில் மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் சுழற்பந்து வீச்சை அருமையாக எதிர் கொண்டு ஆடியதை மறந்து விடக்கூடாது. தனது டெஸ்ட் பயணத்துக்கு முன்பாக நிறைய முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். எப்படி ரன் எடுக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்துள்ளார். அவர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெறுவதற்கு தகுதியானவர்.
டெல்லி டெஸ்ட், இந்திய வீரர் புஜாராவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். எந்த வீரருக்கும் இது மிகப்பெரிய சாதனையாகும். இத்தகைய சாதனையை எட்டுவதற்கு முதலில் திறமை தேவையாகும். அது மட்டுமின்றி நீண்ட காலம் விளையாடுவதற்குரிய நல்ல உடல்தகுதி, கடினமான சூழலில் இருந்து மீள்வது, வெற்றி-தோல்விகளை கையாளும் திறன் உள்ளிட்டவையும் அவசியமாகும். நீங்கள் 100 டெஸ்டுகளில் விளையாடுகிறீர்கள் என்றால் நிறைய ஏற்ற இறக்கங்களை, தடைகளை, வேதனையான தருணங்களை கடந்து தான் வர முடியும்.
மேலும் 100 டெஸ்டில் விளையாடுவதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் விளையாட வேண்டும். அவர் 13-14 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். சில சிறப்பு வாய்ந்த இன்னிங்சுகளை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்களிப்பு அளித்து இருக்கிறார். இந்த தருணத்தை அவருடன் சேர்ந்து நாங்கள் கொண்டாடுவோம்.
இவ்வாறு டிராவிட் கூறினார்.