ஐ.பி.எல் தொடருக்காக கொல்கத்தா அணியுடன் இணைந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்
|2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.
மும்பை,
2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
ஐ.பி.எல் தொடருக்காக சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார். அதேபோல் இன்று டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் சென்னை வந்துள்ளனர். மேலும், விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து மும்பை திரும்பி இருக்கிறார். விரைவில் ஆர்.சி.பி. அணியுடன் விராட் கோலி இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து தற்போது கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக தனது அணியுடன் இணைந்தார். இதை கொல்கத்தா அணி நிர்வாகம் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.