< Back
கிரிக்கெட்
இன்னும் துல்லியமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்து இருக்க வேண்டும் - தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் கருத்து
கிரிக்கெட்

'இன்னும் துல்லியமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்து இருக்க வேண்டும்' - தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் கருத்து

தினத்தந்தி
|
5 May 2023 12:48 AM GMT

இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடியின் மூலம் ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்து விட்டனர் என்று ஷிகர் தவான் தெரிவித்தார்.

மொகாலி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி பதிலடி கொடுத்ததுடன் 5-வது வெற்றியை ருசித்தது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் 3 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை மும்பை அணி 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 5-வது தோல்வியை தழுவிய பஞ்சாப் அணிக்கு மொகாலி மைதானத்தில் விழுந்த 4-வது அடியாகும்.

தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 75 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 66 ரன்னும் விளாசினர். டிம் டேவிட் 19 ரன்னும், திலக் வர்மா 26 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மும்பை அணி வீரர் இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கருத்து தெரிவிக்கையில், 'நாங்கள் நல்ல தொடக்கம் கண்டோம். அத்துடன் மிகவும் நல்ல ஸ்கோரை இலக்காக நிர்ணயித்ததாக நினைத்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த ஸ்கோருக்குள் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. ரிஷி தவான் நன்றாக பந்து வீசினார். ஆனால் மற்ற பவுலர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இஷான் கிஷனும், சூர்யகுமாரும் தங்களது அதிரடியால் ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்து விட்டனர்.

நாங்கள் இன்னும் துல்லியமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்து இருக்க வேண்டும். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக தான் இருந்தது. பந்து வீச்சின் வேகத்தை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதனை நாதன் எலிஸ் சிறப்பாக செய்தார். மற்ற பந்து வீச்சாளர்களிடம் இருந்து முழு திறமை வெளிப்படவில்லை. பனியின் தாக்கமும் பேட்டிங்குக்கு அனுகூலகாக அமைந்தது. அணியின் ஒரு சுழற்பந்து வீச்சாளர் ரன்னை வாரி வழங்கினால், அதனை கட்டுப்படுத்துவது கடினமாகும்' என்றார்.

மேலும் செய்திகள்