ஷிவம் சிங், ஆதித்யா கணேஷ் அதிரடி..!! 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி
|திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றிபெற்றது.
சேலம்,
8 அணிகள் பங்கேற்கும் 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டி.என்.பி.எல். தொடரின் 20-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு நடைபெற்றது. அதில் பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது. முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி தொடக்கம் முதல் சிறப்பாக ஆடியது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய துஷார் ரஹேஜா 30 (22) ரன்களும், சாய் கிஷோர் 45 (35) ரன்களும் , விஜய் ஷங்கர் 43 (27) ரன்களும், அனிருத் 22 (12) ரன்களும் எடுத்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணியின் சார்பில் விமல் குமார் மற்றும் ஷிவம் சிங் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் விமல் குமார் 14 ரன்களும், அடுத்து களமிறங்கிய பூபதி குமார் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக ஷிவம் சிங்குடன் ஆதித்யா கணேஷ் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்த இந்த ஜோடியில் சிவம் சிங் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மறுமுனையில் அதிரடியாக ரன்கள் குவித்த ஆதித்யா கணேஷ் தனது அரைசதத்தை கடந்து ஜொலித்தார்.
இறுதியில் ஷிவம் சிங் 74 (57) ரன்களும், ஆதித்யா கணேஷ் 59 (30) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் திண்டுக்கல் அணி 18.3 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்கள் எடுத்தது. திருப்பூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றிபெற்றது.