ஷிவம் துபேவை டி20 உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வு செய்ய வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
|கேம் சேஞ்சராக இருப்பதற்கு தேவையான அனைத்து திறனும் ஷிவம் துபேவிடம் இருக்கிறது.
ஐதராபாத்,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் துபே 45 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 166 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் எய்டன் மார்க்ரம் 50 ரன்கள் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் சென்னை தரப்பில் ஷிவம் துபே 45 ரன்கள் அடிக்கவில்லை என்றால் சென்னை அணி 150 ரன்களை கடந்திருக்காது. இந்த ஆட்டம் மட்டுமின்றி கடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்தே ஷிவம் துபே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஐ.பி.எல் முடிந்ததும் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் துபே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
பீல்டிங்கை எளிதாகக் கடந்து விளையாடும் ஷிவம் துபேவை பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. அவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். கேம் சேஞ்சராக இருப்பதற்கு தேவையான அனைத்து திறனும் அவரிடம் இருக்கிறது. என்று பதிவிடப்பட்டுள்ளது.