மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கும் ஷிகர் தவான்... எந்த தொடரில் தெரியுமா...?
|ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன ஷிகர் தவான் 2010-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார்.
ஷிகர் தவான் ஐ.சி.சி. தொடர்களில் அசத்தலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர். 2013, 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் அதிக ரன் குவித்து சாதனை படைத்து கோல்டன் பேட்டை பெற்றார்.
இளம் வீரர்கள் வருகையால் ஏற்பட்டுள்ள கடும் போட்டியால் ஏறக்குறைய கடந்த 2 வருடங்களாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்த ஷிகர் தவான், சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில் ஷிகர் தவான் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் தாமும் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு:- "என்னுடைய உடல் இப்போதும் விளையாட்டுக்கு தேவையான விஷயங்களை கொடுக்கும் அளவுக்கு கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. நான் என்னுடைய முடிவுகளில் எளிமையாக இருக்கிறேன். என்னிடம் இருந்து கிரிக்கெட்டை பிரிக்க முடியாது. அது என்னிடமிருந்து வெளியே செல்லாது. எனவே என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து நினைவுகளை உருவாக்க உள்ளேன்" என்று கூறினார்.