< Back
கிரிக்கெட்
நடுவரிடம் நோ-பால் கேட்ட கோலி.. அதிருப்தியில் வாக்குவாதம் செய்த ஷகிப்.. நடந்தது என்ன?- வைரல் வீடியோ

Image Screengrab from Instagram t20worldcup

கிரிக்கெட்

நடுவரிடம் 'நோ-பால்' கேட்ட கோலி.. அதிருப்தியில் வாக்குவாதம் செய்த ஷகிப்.. நடந்தது என்ன?- வைரல் வீடியோ

தினத்தந்தி
|
2 Nov 2022 1:30 PM GMT

முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி நடுவரிடம் நோ பால் கேட்ட பின் அதற்கு நடுவர் நோ பால் வழங்கினார்.

அடிலெய்டு,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அந்த அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் அந்த அணியால் 15 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஆகியோருக்கு இடையே நடந்த விவாதம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக இந்த உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி நடுவர் எராஸ்மசிடம் நோ பால் கேட்ட பின் அதற்கு நடுவர் நோ பால் வழங்கினார். இதில் தவறு ஏதும் இல்லை என்றாலும் பாகிஸ்தான் ரசிகர்கள் அதனை சர்ச்சை ஆக்கினர். தற்போது அதே போல ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் இன்னிங்சில் 16வது ஓவரின் போது வங்காளதேச வீரர் ஹசன் மகமுத் 2வது முறையாக பவுன்சர் பந்தை வீசினார். கிரிக்கெட் விதிகளின்படி ஒரு ஒவருக்கு ஒரு பவுன்சர் மட்டும் தான் அனுமதிக்கப்படும். 2வது முறை வீசினால் அதற்கு நோ பால் அறிவிக்கப்பட்டு, ஃபிரி ஹிட் வழங்கப்படும். இந்த விதியின் காரணத்தால், நடுவரிடம் விராட் கோலி நோ பால் கேட்டார்.

இதற்கு நடுவர்கள் நோ பால் வழங்கி ஃபிரி ஹிட் கொடுத்தனர். கோலி கேட்ட பிறகு ஃபிரி ஹிட் கொடுக்கப்பட்டதாக கருதி அதிருப்தி அடைந்த வங்காளதேச கேப்டன் ஷகிப் நடுவர்களிடம் முறையிட சென்றார். ஷகிப் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போது அவர் அருகே வந்த கோலி அவருடன் சில நொடிகள் விவாதம் நடத்தினார்.

பின்னர் கோலி, சாகிப் தோள் மீது கை போட்டு புன்னகையுடன் எதோ கூற, இருவரும் சிரித்து கொண்டு முதுகில் தட்டி கொடுத்து சென்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்