மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஷகிப் அல்-ஹசன்
|ஷகிப் அல்-ஹசன், சூதாட்ட நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தம் செய்து இருப்பதாக பதிவிட்டிருந்ந்த பதிவு சர்ச்சையாகி இருக்கிறது.
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஷகிப் அல்-ஹசன் தனது பேஸ்புக் பக்கத்தில் 'பெட்வின்னர் நியூஸ்' என்ற விளையாட்டு சூதாட்ட நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தம் செய்து இருப்பதாக பதிவிட்டு இருந்தார். அவரது இந்த பதிவு சர்ச்சையாகி இருக்கிறது.
சூதாட்ட நிறுவனத்துடன் வீரர்கள் யாரும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று விதிமுறை இருக்கும் நிலையில் அவரது பதிவின்படி அவர் சூதாட்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் எதுவும் செய்து இருக்கிறாரா? என்பது குறித்து விசாரிக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் கூறுகையில்,
'முதலில் ஷகிப் அல்-ஹசன் என்ன செய்து இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். சூதாட்டம் தொடர்பான விஷயங்களில் பங்கேற்க கிரிக்கெட் வாரியம் மட்டுமின்றி, அரசும் தடை விதித்து இருக்கிறது. இது முக்கியமான பிரச்சினையாகும். முதலில் அந்த சமூக வலைதள பதிவு குறித்து நாங்கள் விசாரிப்போம். அதில் உண்மையிருந்தால் ஷகிப் அல்-ஹசன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கடந்த 2019-ம் ஆண்டு இந்திய சூதாட்ட தரகர் தன்னை அணுகியதை மறைத்த குற்றத்துக்காக ஷகிப் அல்-ஹசனுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு ஆண்டு தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.