சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி புதிய சாதனை
|தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஷாஹீன் அப்ரிடி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
சிட்னி,
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதின. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதனால் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 9 ஓவர்களில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடி வந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது.
போட்டி நேரம் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அப்ரிடி சர்வதேச டி20 போட்டி வரலாற்றில் மிக இளம் வயதில் (22 வயது, 211 நாட்கள்) 50 விக்கெட்டுகளை வீழ்த்திய "வேகப்பந்து"வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதன்மூலம் அவர் இந்த பட்டியலில் முதலில் இருந்த ஆஸ்திரேலியாவின் மகளிர் அணி வேகப்பந்து வீச்சாளர் எலிஸ் பெர்ரியை (23 வயது 144 நாட்கள்) பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இளம் பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), ஸ்டெபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்) மற்றும் தீப்தி ஷர்மா (இந்தியா) ஆகியோர் முதல் மூன்று இடத்தில் உள்ளனர். இவர்கள் மூவரும் சுழற்பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.