ஷாரூக் கான், முகமது அபார பந்துவீச்சு...திருச்சி 124 ரன்கள் சேர்ப்பு
|கோவை கிங்ஸ் தரப்பில் ஷாரூக் கான், முகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
கோவை,
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரில் கோவையில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வசீம் அகமது மற்றும் அர்ஜுன் மூர்த்தி ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் வசீம் அகமது 17 ரன், அர்ஜூன் மூர்த்தி 3 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஷியாம் சுந்தர் 5 ரன், ஆண்டனி தாஸ் 0 ரன், நிர்மல் குமார் 3 ரன், சரவண குமார் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் திருச்சி அணி 35 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து சஞ்சய் யாதவ் மற்றும் ஜாபர் ஜமால் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் சஞ்சய் யாதவ் 34 ரன் எடுத்த நிலையிலும், அடுத்து களம் புகுந்த ராஜ் குமார் 8 ரன்னிலும், வினோத் 0 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
திருச்சி தரப்பில் அதிகபட்சமாக ஜாபர் ஜமால் 41 ரன்கள் எடுத்தார். கோவை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாரூக் கான், முகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 125 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி ஆட உள்ளது.