ஷபாலி - மந்தனா அபார ஆட்டம்: முதல் நாள் முடிவில் இந்தியா 525/4
|இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 205 ரன்கள் எடுத்தார்.
சென்னை,
இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்த இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.மந்தனா 149 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய சுபா சதீஷ் 15 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார்.
இதில் நிதானமாக ஆடிய ஷபாலி இரட்டை சதம் அடித்த நிலையில், 205 ரன்னிலும், ஜெமிமா 55 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 525 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன், ரிச்சா கோஷ் 43 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். 2ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.