டி20 உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பு யாருக்கு சாத்தியம்?- புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை... ஒரு பார்வை
|மழை காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்படுவதால் குரூப் ஏ புள்ளி பட்டியலில் மிகுந்த சுவாரசியம் ஏற்பட்டுள்ளது
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வரும் நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புபான கட்டத்தை எட்டியுள்ளது. 2 குரூப்களாக நடைபெற்று வரும் லீக் சுற்று வரும் நவம்பர் 6ம் தேதி முடிவடையவுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு குரூப்பிலும் இருந்து 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு வரும் நவம்பர் 9ம் தேதி முதல் அரையிறுதி சுற்று தொடங்கவுள்ளது.
குரூப் பி பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா (4 புள்ளிகள்- முதலிடம்) மற்றும் தென் ஆப்பிரிக்கா ( 3 புள்ளிகள்-இரண்டாமிடம்) அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.
அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று அதிர்ச்சி அளித்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி குரூப் பி புள்ளி பட்டியலில் 3 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் நெதர்லாந்து, பாகிஸ்தான் அணிகள் தொடர் தோல்விகளை பெற்றதால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது.
மற்றொரு புறம் மழை காரணமாக குரூப் ஏ அணிகளின் பிரிவில் மிகுந்த சுவாரசியம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து, இலங்கை அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடிவிட்ட போதும், 6 அணிகளுமே அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு பலமாக உள்ளது. இந்த குரூப்-ன் முக்கியமான 3 போட்டிகள் மழையின் காரணமாக முற்றிலும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. குறிப்பாக இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
தற்போது குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 3 புள்ளிகளுடன் உள்ளன. இலங்கை 2 போட்டிகளில் 1 வெற்றியுடன் 5-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்திலும் உள்ளது. இதனால் இந்த குரூப்பில் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு அனைத்து அணிகளுக்கும் உள்ளது.
குரூப் 1 சுற்றில் அணிகளின் அரையிறுதி வாய்ப்புகள்:
இங்கிலாந்து அணி:
இங்கிலாந்து தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து(நவம்பர் 1) மற்றும் இலங்கையை (நவம்பர் 5) எதிர்கொள்கிறது. இரண்டு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆக வேண்டும்.
ஆஸ்திரேலிய அணி:
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால் அயர்லாந்து (அக்டோபர் 31), ஆப்கானிஸ்தான் (நவம்பர் 4) ஆகிய அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மீதமுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, இங்கிலாந்து, அயர்லாந்து, இலங்கை ஆகிய அணிகள் எஞ்சியுள்ள ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் ஆஸி., அணி உடனடியாக தகுதி பெறும். ஆனால் அது நடக்கவில்லை என்றால், ஆஸ்திரேலியா அணி ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தை பின்னுக்கு தள்ள வேண்டும்.
இலங்கை அணி:
இலங்கை தற்போது 2 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை விட சிறந்த நிலையில் இலங்கை உள்ளது.
நியூசிலாந்து (அக்டோபர் 29), ஆப்கானிஸ்தான் (நவம்பர் 1), மற்றும் இங்கிலாந்து (நவம்பர் 4) ஆகிய அணிகளுக்கு எதிரான கடைசி மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால் இலங்கை அணி மொத்தம் 8 புள்ளிகளுடன் நேரடியாக தகுதி பெறும். அதேசமயம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக ஏழு புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.