மில்லரின் அதிரடி சதம் வீண்..!! 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
|தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை 2- 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
கவுகாத்தி,
இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் தொடரில் திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா,கே.எல்.ராகுல் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். இவர்களை விக்கெட் எடுக்க தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.
தொடக்க விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 37 பந்துகளில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ராகுல் அரை சதம் அடித்தார். தொடர்ந்து அவர் 28 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலி , சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் சிக்சர் மழை பொழிந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் அவர் 22 பந்துகளில் 61 ரன்களில் குவித்து ரன் அவுட் ஆனார்.
இறுதியில் விராட் கோலி 49 (28) ரன்களுடன், தினேஷ் கார்த்திக் 17 (7) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக மகராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் களமிறங்கிய கேப்டன் பவுமா (0) ரன் ஏதும் எடுக்காமலும், அடுத்து களமிறங்கிய ரூசோவ் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து டி காக்குடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் 33 (19) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அடுத்ததாக டி காக்குடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடியில் டி காக் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தங்களது அரை சதத்தை பதிவு செய்தனர்.
தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தி அணியை வெற்றிபெற வைக்க போராடினர். வாணவேடிக்கை காட்டிய டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார்.
இறுதியில் டி காக் 69 (48) ரன்களுடன், டேவிட் மில்லர் 106 (47) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2- 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.