ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை 27ந்தேதி வெளியாகும்: ஐசிசி அறிவிப்பு
|ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை, வருகிற 27ம் தேதி வெளியாக உள்ளது.
மும்பை,
10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பா கிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
போட்டிக்காக ,பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மஷாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை. ஆகிய இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன . தொடரில் 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கான வரைவு அட்டவணை சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து, மும்பையில் வருகிற 27ம் தேதி காலை 11.30 மணிக்கு வெளியிட உள்ளன.
முன்னதாக உலகக் கோப்பை போட்டியில் தங்களுக்கான போட்டி நடைபெறும் 2 இடங்களை மட்டும் மாற்றும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி இருந்தது. பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஐசிசி மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.