சர்பராஸ் கான் சாதாரண வீரர் அல்ல - ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டு
|இந்திய அணிக்காக விளையாட தகுதியான ஒரு வீரர் தேவை என்றால் அது சர்பராஸ் கானாக இருப்பார் என்று டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த 2-வது போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன்பாகவே விராட் கோலியும் முதலிரண்டு போட்டிகளில் சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.
இருப்பினும் இந்த 3 வீரர்கள் இல்லாததால் 2-வது போட்டியில் ரஜத் படிதார் அல்லது சர்பராஸ் கான் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணியின் பிளேயிங் 11-ல் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமான புள்ளிவிவரத்தை வைத்துள்ள சர்பராஸ் கான் சாதாரண வீரர் அல்ல என்று தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். எனவே சர்பராஸ் 2வது போட்டியில் அறிமுகமாக களமிறங்க சரியானவர் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு.
"இது ஆர்வமாக இருக்கிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் அவருடைய புள்ளி விவரங்கள் அபாரமாக இருக்கிறது. எனவே இந்திய அணிக்காக விளையாட தகுதியான ஒரு வீரர் தேவை என்றால் அது அவராக இருப்பார். ஏனெனில் 66 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் 3912 ரன்களை 69.85 என்ற சராசரியில் குவித்துள்ளார். அதில் அவர் 14 சதங்கள் மற்றும் 11 அரை சதங்கள் அடித்துள்ளார்.
நண்பர்களே இது சாதாரணமல்ல. முதல் தர கிரிக்கெட்டில் இது மிகவும் சிறந்த ரெக்கார்ட். இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு வாய்ப்பு கொடுப்பது பெரியது என்பதை நான் அறிவேன். இருப்பினும் தரமான அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என கூறினார்.