எனக்கு ஜீரோ எதிர்பார்ப்புதான் இருக்கிறது - சர்பராஸ் கான்
|வங்காளதேச தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமான சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். ரஞ்சிக் கோப்பையில் சமீபத்திய வருடங்களாக தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது புஜாரா சீனியர்களை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சர்பாரஸ் கான், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.
அந்த வாய்ப்பில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் தொடரிலேயே 3 அரைசதங்கள் அடித்த சர்பராஸ் கான் தேர்வுக்குழுவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.
இருப்பினும் இங்கிலாந்து தொடரில் காயத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தற்போது குணமடைந்துள்ளனர். அதனால் அடுத்து நடைபெறும் வங்காளதேச தொடரில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் வங்காளதேச தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த நடைபெறும் துலீப் கோப்பைக்காக கடினமான பயிற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே நல்ல பிட்னஸ் கடைப்பிடித்து சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "எந்த இடைவெளியும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. பெரும்பாலும் காலை 4.15 - 4.30 மணிக்கு எழுந்து நீண்ட தூரம் நான் ஓடிப் பயிற்சிகளை எடுக்கிறேன். அது என்னுடைய பிட்னசை முன்னேற்ற உதவுகிறது. அதன் உதவியுடன் இந்த மாதத்தின் இறுதியில் என்னால் 30 - 31 நிமிடங்களில் 5 கிலோமீட்டர் ஓட முடிகிறது. ஓட்டப் பயிற்சிகளை முடித்த பின் நான் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வேன். அதன் பின் மாலையில் பேட்டிங் பயிற்சிகளை எடுப்பேன். தற்போதைய நிலைமையில் வங்காளதேச தொடரை நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நான் செயல்முறைகளை பின்பற்றி தயாராக இருக்க வேண்டும்.
சமீபத்தில் மும்பையில் மழை பெய்ததால் இது போன்ற பயிற்சிகளை நான் எடுக்கவில்லை. உள்ளரங்கத்தில் பயிற்சி எடுப்பதை விட வெளியே பயிற்சி எடுப்பதே சவாலாக இருக்கும். தற்போதைய நிலைமையில் எனக்கு ஜீரோ எதிர்பார்ப்புதான் இருக்கிறது. ஆனால் வாய்ப்பு வரும்போது அசத்துவதற்கு நான் தயாராக இருக்க வேண்டும். அதனாலேயே தற்போது நான் கடினமாக பயிற்சிகளை எடுத்து வருகிறேன். அதை மாற்றுவதற்கான எந்த காரணமும் எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.