சான்ட்னர் அபார பந்துவீச்சு...நெதர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து...!
|நியூசிலாந்து அணி தரப்பில் மிட்செல் சான்ட்னர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஐதராபாத்,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. இதையடுத்து 323 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது.
நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விக்ரம்ஜித் சிங் 12 ரன், மேக்ஸ் ஓ டவுட் 16 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய காலின் அக்கெர்மென் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
இதில் பாஸ் டீ லீட் 18 ரன், நிதாமனுரு 21 ரன், ஸ்காட் எட்வர்ட்ஸ் 30 ரன், வான் டர் மெர்வ் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதற்கிடையில் நிலைத்து நின்று ஆடிய அக்கெர்மென் 69 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 99 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தனது 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.