இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம் - ரசிகர்கள் மகிழ்ச்சி
|இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா முன்னாள் வீரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி ஒரு வெற்றி, இரு தோல்வி, ஒரு முடிவில்லை என 3 புள்ளிகள் மட்டுமே பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்வி எதிரொலியாக இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் (இங்கிலாந்து) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த சில்வர்வுட் திடீரென பதவியை ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடியும் வரை அவர் இப்பதவியில் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயசூர்யா இதற்கு முன் இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.