டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்சனே முதன்மை விக்கெட் கீப்பராக ஆட வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
|டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனே முதன்மை விக்கெட் கீப்பராக ஆட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
மும்பை,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.
இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்த அணியில் பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சனும், ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் இடம் பெறுள்ளனர்.
இந்த அணிக்கு பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியதாவது, ரிஷப் பண்ட் ஐ.பி.எல் தொடரில் நன்றாக விளையாடினார். மேலும் அவர் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார். அவர் நன்றாக பேட்டிங் செய்ததுடன் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார்.
ஆனால் சஞ்சு சாம்சன் இந்த முறை 60, 70 ரன்கள் என்று தொடர்ந்து எடுத்துள்ளார். முன்பு போல அவர் 30, 40 ரன்களில் வெளியேறவில்லை. எனவே அவர் இந்தியாவிற்கு ஏதாவது செய்வார் என்று நம்புகிறேன். மேலும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் என்பது தேவையில்லை.
இதன் காரணமாக ரிங்கு சிங் விளையாட முடியாமல் போய்விட்டது. அவர் 20 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து தனியாளாக ஆட்டத்தை முடிக்க கூடியவர். மேலும் இந்திய அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட போவதும் இல்லை. மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
அதுவும் கண்டிஷன் சாதகமாக இருந்தால் மட்டுமே நடக்கும். இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக இருக்கிறது. இந்திய அணி உறுதியாக பாகிஸ்தான் அணியை வெல்லும். ஏனென்றால் கடந்த காலங்களில் அவர்களுக்கு எதிராக நமது வெற்றி சிறப்பாக இருந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.