< Back
கிரிக்கெட்
இந்திய அணிக்காக அசத்தப்போகும் அடுத்த தமிழக வீரராக சாய் சுதர்சன் இருப்பார் - அஸ்வின்
கிரிக்கெட்

இந்திய அணிக்காக அசத்தப்போகும் அடுத்த தமிழக வீரராக சாய் சுதர்சன் இருப்பார் - அஸ்வின்

தினத்தந்தி
|
13 Dec 2023 12:48 PM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டி20 போட்டிகள் நிறைவடைந்தவுடன் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் டிஎன்பிஎல் தொடரில் நன்றாக விளையாடியதால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தேர்வான அவர் 2023 சீசனின் இறுதிப்போட்டியில் சென்னைக்கு எதிராக 96 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். அதனால் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் போன்ற பலரின் பாராட்டுகளை அள்ளிய அவர் இலங்கையில் நடைபெற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்று பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றி பெற வைத்தார்.

இந்நிலையில் தாம் மற்றும் தினேஷ் கார்த்திக் வரிசையில் இந்தியாவுக்காக அசத்தப்போகும் அடுத்த தமிழக வீரராக சாய் சுதர்சன் இருப்பார் என்று அஸ்வின் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு;- "மாநில அணியில் விளையாடிய நீங்கள் தேசிய அணியில் சிறப்பாக செயல்படுவதற்கு ஒரு படி மேலே சென்று அசத்த வேண்டும். அந்த திறமை அவரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். சர்வதேச அரங்கில் வெவ்வேறு பந்து வீச்சுக்கு எதிராக வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாடுவதால் அதை செய்வது எளிதானதல்ல. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்காக விளையாடும் 11 பேர் அணியில் இடம் பெறக்கூடிய வீரராக சாய் சுதர்சன் இருப்பார்.

தற்போது தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியில் இருக்கும் அவர் கெய்க்வாட்டுடன் துவக்க வீரராக களமிறங்குவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை ரஜத் படிதார் துவக்க வீரராக விளையாடினாலும் சாய் சுதர்சன் 3வது இடத்தில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் டாப் 4 இடங்களில் இந்தியா ஒரு இடது கை பேட்ஸ்மேனை தேடிக் கொண்டிருக்கிறது என்பதை மறக்காதீர்கள். எனவே சுழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடிய திறமையைக் கொண்டுள்ள அவரால் கிடைக்கும் வாய்ப்பில் வெற்றிக்கு போராட முடியும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்