< Back
கிரிக்கெட்
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்ந்தது குறித்து சச்சின் கருத்து..!
கிரிக்கெட்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்ந்தது குறித்து சச்சின் கருத்து..!

தினத்தந்தி
|
4 Jan 2024 4:30 PM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

கேப்டவுன்,

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா வெறும் 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக சிராஜ் 6 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியும் தடுமாற்றத்துடனே விளையாடியது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் அடித்தார்.

பின்னர் 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் அடித்திருந்தபோது முதல் நாள் ஆட்ட நேர முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் விழுந்தது குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை கூறி வரும் வேளையில் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில்,

'2024-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே 23 விக்கெட்டுகள் ஒரே நாளில் வீழ்ந்துள்ளன. நம்ப முடியவில்லை! தென் ஆப்பிரிக்க அணி ஆல் அவுட்டானபோது நான் விமானத்தில் ஏறினேன். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தால் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியே திரும்பவும் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த போட்டியில் நான் எங்கு எதை தவறவிட்டேன்? என்று எனக்கு புரியவில்லை' என்று சுவாரசியமான கருத்தை பதிவிட்டுள்ளார். அவரது இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்