உலகக்கோப்பை புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக காத்திருப்பதாக டுவீட்
|பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக ஆவலோடு காத்திருப்பதாக சச்சின் டெண்டுல்கர் டுவீட் செய்துள்ளார்.
ஸ்ரீநகர்,
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதலை காண்பதற்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்தி 10 ஆண்டுக்கு மேலாகி விட்டது. ஐ.சி.சி. உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு அணிகளும் மோதுகின்றன. அதனால் முன்பை விட இப்போது எதிர்பார்ப்பு இன்னும் எகிறி விட்டது.
இந்த நிலையில் இன்றைய இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்கு ஆவலோடு காத்திருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டுவீட் செய்துள்ளார். 2003 ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது இந்தியா-பாகிஸ்தான் அணி வீரர்கள் மகிழ்ச்சியாக உரையாடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அவர் டுவீட் செய்துள்ளார்.